Monday, December 13, 2010

மொறைக்கக் கத்துக்கிடேன் நெஜமா மொறைக்கக் கத்துக்கிட்டேன்

உண்மையில் தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

மொறைக்க கத்துக் கிட்டேன் சங்கரா மொறைக்கக் கத்துக்கிட்டேன். ரங்ஸ் இல்லீங்க.....நம்ம ’சங்கர நேத்ராலயா’ தான் கத்துக் கொடுத்தது.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் படிக்க சிரமமாயிருந்ததால் நெல்லை போயிருந்த போது அங்குள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு டெஸ்ட்டுக்குப் போனேன்.

செக்கிவிட்டு ரீடிங்க் க்ளாஸுக்கு பிரிஸ்க்கிரிப்ஷன் எழுதிக் கொடுத்ததோடு மறுபடி செக்கப்புக்கு வர சொன்னார்கள். நான் சென்னை வாசி என்றதும் சங்கர நேத்ராலயாவுக்கு ஒரு கடிதம் கொடுத்து அங்கு கண்டிப்பாக செக்கப் செய்யும் படி சொன்னார்கள்.

என்னமோ நடக்குது மர்மமாயிருக்குதுன்னு சென்னை வந்ததும் அங்கு போனேன். கண் பரிசோதனைக்குப் பின் டாக்டர் என்னிடம், ‘உங்க குடும்பத்தில் யாருக்காவது க்ளாக்கோமா இருக்கிறதா?’’ என்று, உங்க டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா என்பது போல் கேட்டார். எங்க வீட்டில் வெறும் கோமாதான் இருக்கிறாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ‘ஆமாம், அப்பாவுக்கும் சின்னக்காவுக்கும் இருந்தது.’ என்றேன்.

உடனே அவர், ‘நல்லவேளை! உங்களுக்கு க்ளாக்கோமா பார்டர் லைனில்தான் இருக்கிறது.’ என்றார். வெள்ளெழுத்துக்காக வந்ததில் இது வெட்ட வெளிச்சமாகிவிட்டது . இல்லையென்றால் எல்லை தாண்டி வெகு தூரம் வந்த பின்தான் தெரிந்திருக்கும். ஆஹா...! இதுதானா சங்கதி.......இதுக்குத்தானா நம்மை பந்தாடினார்கள்!!!! ஆனாலும் பார்டரில் இருப்பது அறிந்து ஒரு நிம்மதி!

பிறகு.....? பிறகென்ன.......ரெகுலர் செக்கப், ஐ-ட்ராப்ஸ் என்று வருடங்கள் ஓடின.
அந்த காலங்களில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்!!!!!


அப்போது ஆதம்பாக்கத்திலிருந்ததால் செயிண்ட் தாமஸ் மவுண்டில் உள்ள சங்கர நேத்ராலயாவுக்கு போனேன். அங்கு பரிசோதித்துவிட்டு, கையில் ஒரு ரெஃபரன்ஸ் கடிதம் கொடுத்து நுங்கம்பாக்கம் காலேஜ் ரோட்டிலுள்ள மெயின் செண்டருக்கு போகச் சொல்லி மட்டையால் ஓங்கி அடித்தார்கள். பவுண்டரி தாண்டி சிக்ஸர் அடித்தது போல் நுங்கம்பாக்கம் வந்து விழுந்தேன்.

அங்கு பலத்த சோதனைகளுக்குப் பின் க்ளாக்கோமா பிரிவுக்கு அனுப்பினார்கள். அன்றிலிருந்து பல வகையான பரிசோதனைகளுக்கு ஆளாக்கி என்னை பார்டர் லைனிலேயே இருக்கும் படி பார்த்துக்கொண்டார்கள்.


Slit-lamp maicroscope

இந்த கருவிக்கும் எனக்குமுள்ள பந்தம் முன் ஜென்மத்து பந்தமோ என்னவோ? அப்படி ஒட்டிக்கொண்டது. ஒவ்வொரு முறையும் முதலில் ப்ரிமினலரி டெஸ்ட் முடிந்ததும்.....அதிலும் ஒரு வேடிக்கை.

போர்டைப்பார்த்து படிக்கச்சொல்வார்கள். கிட்டத்தட்ட மனப்பாடமாகவே ஆகிவிட்டது. ஸோ அவர்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாமே என்று, ‘கடைசி வரிசை மட்டும் படிக்கிறேனே!’ என்பேன். அவரரும் சிரித்துக்கொண்டே ஓகே என்பார்.

அது முடிந்த பிறகு, டைலேஷன், மூன்று முறை ட்ராப்ஸ் விட்டு முடிந்ததும் இந்த ஸ்லிட் லேம்ப் மைக்ரோஸ்கோப் எதிரே வந்து அமர்ந்து கொள்வேன். அங்கும் ஒரு ட்ராப்ஸ் போட்டு, தாடையையும் நெற்றியையும் அதில் அழுத்தமாகப் பொருத்தி வைத்துக் கொண்டு டாக்டர் கூறியபடி அவரது அந்தக் காது நுனியையும் இந்தக்காது நுனியையும் கண்ணை இமைக்காமல், ஒவ்வொரு கண்ணாக விரித்துப் பார்ப்பேன். ஆரம்பத்தில் விரித்து விழிக்கவும் இமை கொட்டாமல் பார்க்கவும் கொஞ்சம் சிரமப் பட்டேன்.

’லென்ஸைப் பார்த்து நல்லா கண்ணை விரியுங்கள், கண்ணைக் கொட்டாதீர்கள் மேடம்’ என்று மரியாதையோடு சொல்வார். அப்பவும் முடியவில்லை என்றால், எரிச்சலில் ’உச்’ கொட்டுவார். நாமென்ன வேணுமின்னா செய்றோம்? அந்-இண்டென்ஷனலாக நடக்கிறது.

வீட்டுக்கு வந்து இமை கொட்டாமல், முழித்து முழித்து பார்த்து ப்ராக்டீஸ் செய்து கொள்வேன்.

பிள்ளைகளை கோபப் பார்வை பார்த்ததில்லை, அப்படியே பார்த்தாலும் கண்டு கொள்ளாததுகள்.

இதில் பாவம் என்னவென்றால் ஒரே அறையில் ரெண்டு மூன்று ஸிலிட்-லேம்ப் மைக்ராஸ்கோப்கள் இருக்கும். சில வயதான படிப்பறிவில்லாத கிராமத்து பெண்மணிகளை பரிசோதிக்கும் போது அவர்களுக்குப் புரியாது செய்யவும் இயலாது. அப்போது எரிச்சலில் அவர்களை திட்டுவார்கள் பாருங்கள்......பரிதாபமாயிருக்கும்.

மரியாதையையும் அன்பையும் அவர்களிடமும் காட்ட வேண்டும். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. தினம் நூற்றுக்கணக்கான பேர்களை சோதிக்கும் போது பொறுமை இழப்பது இயல்புதானே!

இப்படியாகத்தானே......நாளுக்கு நாள் சோதனைக்குப் போகும் போது படிப்படியாக என்னை தேத்திக்கிட்டேன். அதாவது மொறைக்கக் கத்துக்கிட்டேன், அதுவும் இமைக்காமல். பிறகு சோதனைக்குப் போய் உக்காந்தவுடன், போட்ட ட்ராப்ஸ்ஸின் எரிச்சலையும் மீறி கண்ணை விரிக்கவும் நிலைகுத்திய பார்வையுமாக என்னை நிலை நிறுத்திக் கொண்டேன். அதுவும் நீல நிற வெளிச்சத்தில் ஒரு லென்ஸ் கண்ணை குத்த வருவது போல் ரெட்டினாவை தொட்டும் தொடாமலும் கண்ணின் அழுத்தத்தை கணக்கிடும் போது ஒரு அலாதியான சுகமாக உணரவாரம்பித்தேன்.வாழ்கையில் நான் யாரையும் மொறச்சதில்லை. அப்படியே மொறச்சாலும் என்னோட இத்தணுண்டு கண்களால் மொறச்சா மாதிரியே தெரியாது.

எனவே எனக்கு மொறைக்கக் கத்துக்கொடுத்த ஆசான் நம்ம “சங்கர நேத்ராலயாதான்” அதுக்கு என் நன்றி.இதன் பிறகு சில சமயம் ஃபீல்ட் டெஸ்ட்(FIELD TEST) என்று ஒரு டெஸ்ட் செய்யச் சொல்வார்கள். அதுக்கு தனி கட்டணம். முதல் முறை விளங்காமல் சில தவறுகள் செய்தேன். பின் பழக பழக அதில் தில்லாலங்கடி ஆகிவிட்டேன். அதிலும் இதேபோல் விரித்த இமைக்காத ஒவ்வொரு கண்களுக்குமான டெஸ்ட். தாடையையும் நெற்றியையும் அதனிடத்தில் பொருத்திக்கொண்டவுடன் நம் கையில் ஒரு க்ளிக் க்ளிக் செய்யும் படி ஒரு ஸ்விட்சை கொடுப்பார்கள்.

எதிரே பெரிய குழிவான திரையில் ஆங்காங்கே சின்ன சின்ன லைட் ஃப்ளிக்கராகும். ஒவ்வொரு ஃப்ளிக்கருக்கும் கையிலிருக்கும் ஸ்விட்சை க்ளிக் செய்ய வேண்டும். லைட் பிரகாசமாயும் இருக்கும் கம்மியான வோல்டேஜில் எரிவது போலுமிருக்கும். மையத்தில் உள்ள ஒரு லைட்டை மட்டுமே பார்த்துக்கொண்டு சுற்றிலும் தெரியும் வெளிச்சத்தை பார்த்தவுடன் க்ளிக் செய்ய வேண்டும். நாம் ஒழுங்கா செய்தால்தான் கம்ப்யூட்டரில் சரியாக பதிவாகும். நமக்கு என்ன பிரச்சனை என்று புரிபடும். இங்கும் அதே போல்தான் சிலருக்கு திட்டு விழும். ”இது உங்களுக்கானது சரியாக செய்தால்தான் சோதனை முடிவில் பிரச்சனைகளை அறிய முடியும், மேலும் உங்கள் பணமும் வீணாகாது.” என்பார்கள். உண்மைதானே!!

பிறகு ஃபீல்ட் டெஸ்ட் என்றால் ஆர்வமாக ஒரு கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது போல் விளையாடி ‘வெரி குட்!’ வாங்கி பாஸ் பண்ணுவேன்.

அப்போதெல்லாம் சங்கராவுக்குப் போகணுமின்னால் ஒரு முழுநாளை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டும்.

காலை பத்து மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் என்றால் பதினைந்து நிமிடம் முன்னால் போய் ரிபோர்ட் கொடுத்தால்......கூப்பிடுவார்கள், கூப்பிடுவார்கள் என்று காத்திருக்கணும். பிறகு பன்னிரண்டு பணிக்கு ஒவ்வொரு அறையாக பரிசோதனைகள் முடிந்ததும், அந்த செகரட்டரி, “இப்போ லன்ச் அவர்! டாக்டர் இனி ரெண்டு மணிக்குத்தான் வருவார். அனைவரும் கீழே போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்!” என்பார், ஏதோ கல்யாண வீட்டில் சாப்பிட அழைப்பது மாதிரி. அது கிட்டத்தட்ட ஒரு கட்டாயமாக்கப் பட்ட விஷயம் ஆகிவிட்டது. காண்டினில், ஒசியில் அல்ல காசு கொடுத்து சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்தால்.....முன்று மணிக்கு அழைத்து டாக்டரைப் பார்த்துவிட்டு அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு வெளியில் வரும் போது மணி ஐந்தைத் தொட்டிருக்கும்.

சங்கர நேத்ராலயாவின் ஒரு கிளை இப்போது ராஜாஅண்ணாமலைபுரத்துக்கும் வந்துவிட்டது. எனக்கு கொஞ்சம் சௌகரியமாகி விட்டது.

நேரமாகிறது என்று நாம் சொல்கிறோம். ஆனால் அங்கு வேலை ரொம்ப சரியாக ந்டக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாம் ரிபோர்ட் செய்தவுடன் நம்முடைய ஃபைல் செகரட்டரியின் மேஜைக்கு வந்துவிடுகிறது. ஸோ நாம் சீக்கிரமே வந்து ரிப்போர்ட் செய்தால் நம் ஃபைல் முதலில் இருக்கும். பின் வரும் ஃபைல்களும் வரிசையாக அடுக்கி வைக்கப் படுகின்றன. ஆகவே அந்த வரிசைப்படி அழைக்கப் படுகிறார்கள். பேஷண்டுக்கு பேஷண்ட் நேரம் மாறுமடுமல்லவா? அதனால்தான் தாமதம்.

பி.கு.
பதிவில் காணும் படங்களில் இருப்பது.....ஹி..ஹி..நானல்ல!!! (இல்லாட்டாலும் தெரியாதாக்கும்) கூகுளில் சுட்டது!!!!7 comments:

 1. பிறகு ஃபீல்ட் டெஸ்ட் என்றால் ஆர்வமாக ஒரு கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது போல் விளையாடி ‘வெரி குட்!’ வாங்கி பாஸ் பண்ணுவேன்.//
  கண் டெஸ்டுக்கு செல்பவர்களுக்கு உபயோகமான பதிவு.

  ReplyDelete
 2. HMM field ...test...summa vellaadunga Naanaani. enakkum intha field test rombap pidikkum;)

  ReplyDelete
 3. உண்மைதான்...ராஜேஸ்ஸ்வரி!!

  ReplyDelete
 4. வல்லி,
  எனக்கும் அந்த கேம் ரொம்பப் பிடிக்கும்.

  ReplyDelete
 5. நல்ல பதிவு. இதுக்கு அப்புறம் எழுதலையா நானானி மேம்.

  ReplyDelete
 6. super https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

  ReplyDelete
 7. super https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

  ReplyDelete